இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா? |
மத அடிப்படையிலான புள்ளி விபரங்களுடன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது பிரச்சனையக் கிளப்பும் என்கிறார் மக்கள் தொகை நிபுணர் ஜெயராஜ்.
2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் மத அடிப்படையிலான மக்கள் தொகை புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விபரங்களின் சமூகப் பொருளாதாரக் காரணிகள் மத ரீதியில் தொகுக்கப்பட்டு இந்திய அரசால் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்து மதத்தினர் இடையே பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது; அதே வேளை முஸ்லிம் சமுதாயத்தினர் இடையே பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது என்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மத அடிப்படையில் புள்ளி விபரங்கள் வெளியிடுவது சரிதானா? எதார்த்த நிலை இதில் முழுமையாகத் தெரிகிறதா? என்பவை பற்றி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவன ஆய்வாளர் மற்றும் மக்கள் தொகை நிபுணர் ஜெயராஜ், தமிழோசைக்கு கருத்து வெளியிட்டார்.
மத அடிப்படையில் மாத்திரம் மக்கள் தொகைப் புள்ளி விபரங்களைத் தருவது பிரச்சினைக்குரிய விவகாரம் என்று ஜெயராஜ் கூறினார்.
புள்ளி விபரங்களை மத அடிப்படையில் மட்டும் தராமல், சமூக பொருளாதார வரையறைகள் அடிப்படையிலும் வெளியிட்டிருந்தால் கூடுதலான நன்மைகள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி விஷமிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களுக்கு எதிரான துவேஷங்களைத் தூண்டிவிடும் அபாயம் இருக்கிறது என்று ஜெயராஜ் தெரிவித்தார்.
இந்தியாவில் சீக்கிய சமூகத்தில் ஆண், பெண் விகிதாசாரத்தில் உள்ள வேறுபாடு குறித்தும், கவலை வெளியிட்ட அவர், சீக்கிய சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக