இஸ்லாம்

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். PhotobucketPhotobucket

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

கருணையினதும் தர்மத்தினதும் சிற்ப்பான மாதம்

ரமழான் மாதம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இம்மாதமானது எத்தனையோ வழிகளில் அருள் பெற்ற மாதமாகும். இது இறைவனின் மிகச் சிறந்ததோர் அன்பளிப்பாகும்.இன்றுள்ள எமது ஏற்ற, இறக்க நிலைமையில் எம்மை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் இம்மாதத்தால் முடிகிறது. அத்தோடு தனிப்பட்ட முறையிலும் சமுதாயம் என்ற வகையிலும் எமது நிலைமையை முழுமையாக மாற்றியமைக்கக் கூடிய திறனும் இதற்கு உண்டு.

இஸ்லாம் எனும் பூந்தோப்பில் ரமழான் என்பது வசந்த காலமாகும். காய்ந்து கருகிப்போன மரங்களில் பசுமை தளிர்விட்டு பூத்துக் குழங்க ஆரம்பிக்கும். வரண்டு போன மனித உள்ளங்களில் ஆன்மீக ரீதியான பசுமையை ஏற்படுத்தி மனிதனுக்கு உண்மையான வாழ்வை அளிக்கிறது இந்த மாதம்.

எனினும் உயிரோட்டமற்ற, உணர்வு இல்லாத வெறும் கிரியைகளால் மாத்திரம் இத்தகைய ஆன்மீக பயன்பாட்டினை அடைந்து கொள்ள முடியாது. ரமழான் சுமந்து வரும் உண்மையான கருத்திற்கு அமைய எமது செயற்பாடுகள் அமையுமென்றால் நிச்சயமாக இந்த பயன்பாடுகள் அனைத்தும் எமக்குக் கிடைக்கும்.

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் சடவாத கருத்துக்களும் அதன் சிந்தனைகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்ப்பரிப்புக்களுக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் ரமழான் கொண்டுவரும் செய்திகளும் அதன் கருத்துக்களும் எங்கோ ஒரு மூலையில் மறைத்து கிடக்கின்றன.

இந்த சடவாத கருத்துக்களுக்கு நாம் எம்மை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளது மாத்திரமன்றி, இந்த ரமழான் காலப் பகுதியிலும் எம்மில் அநேகர் இந்த சிந்தனைகளுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளனர்.

மனிதர்களாகிய நாம் வெறுமனே உடலை மாத்திரம் கொண்ட ஜீவன்கள் அல்லர் என்பது தான் ரமழான் எமக்கு சொல்லி உணர்த்தும் ஆணித்தரமான செய்தி. நாம் உடலையும் ஆன்மாவையும் ஒருங்கே சுமந்து கொண்ட உயர் படைப்பு.

எம்மை மனிதன் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளதும் மனிதன் என்ற வகையில் எமது விழுமியங்களை உறுதியுடன் தக்க வைத்துக் கொள்ள துணை புரிவதும் இந்த ஆன்மாவாகும். வெறும் உடலால் இந்த நிலையை அடைந்து கொள்ள முடியாது.

இந்த ரமழான் காலப் பகுதியில் உடல் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு ஆன்மா முதல் நிலைக்கு உயர்த்தப்படுகிறது. எனினும் சடவாத, சிற்றின்ப, பொப் கலாசார கருத்துக்களும் சிந்தனைகளும் பொதுவாக அனைத்து முஸ்லிம் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
உடலும் உடலை சார்ந்த தேவைகளுமே பிரதானமானது என்றே இந்த சிந்தனைகள் சொல்லுகின்றன. சடவாத உலகானது இவற்றையே அதிமுக்கியமானவைகளாக காட்டுகின்றன. உடலியல் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக பெருமகிழ்ச்சியை அடைந்து கொள்ள முடியுமென்ற உண்மைக்குப் புறம்பான செய்தியையும் இந்த சிந்தனைகள் கூறுகின்றன.

உடலும் உடலியல் தேவைகளுமே பிரதானமானதெனக் கூறும் இந்த சடவாத கருத்துக்கள் முடிவில்லாத பேராசைகளை தோற்றுவிக்கின்றன. எனவே, இதன் மூலம், முடிவில்லாத சுரண்டல்களுக்கு வழிவகுத்து முடிவில்லாத பேராசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக முடிவில்லாத யுத்தங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

அநேநேரம், மனித ஆசையும் அவனால் உச்ச கட்டமாக அடைந்து கொள்ள முடியுமானவைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை ஒரு போதும் நிரப்ப முடியாது என்பதால், இந்த சடவாத சிந்தனைகளும் கருத்துக்களும் மனிதனில் நிராசையையும் மன உளைச்சலையும் தான் தோற்றுவிக்கின்றன.

அதேநேரம், இவை முடிவற்ற குழப்ப நிலைக்கும் முடிவற்ற அடக்கு முறைக்கும் வழிவகுக்கின்றன. எனினும், இந்த கழிவு சிந்தனைகள் யாவும் தூரதிர்ஷ்டவசமாக மிகவும் அழகான வடிவங்களைப் பெற்று எம்மிடம் வருகின்ற போது அநேக சந்தர்ப்பங்களில் இவற்றை எதிர்த்து நிற்க முடியாமல் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.

அதேநேரம், இந்த அடிமைத்துவ சிந்தனைகளை சுதந்திரம், சுபீட்சம் என்பவற்றோடு நாம் சமப்படுத்தி நோக்கிறோம். இந்த பேரழிவை நோக்கிய பயணத்தை நாம் முன்னேற்றத்தை நோக்கிய அணிவகுப்பாக கருதுகிறோம். ஒவ்வொரு கணப்பொழுதிலும் நாம் படிப்படியாக இந்த சக்திக்குள் மூழ்கிச் செல்கின்றோம்.

இங்குதான் ரமழான் எம்மை விடுவிக்க வருகின்றது. உடலியல் தேவைகளை மிகைத்து ஆன்மாவை மேம்படுத்த வேண்டுமென்ற பலம்வாய்ந்த செய்தி மூலம் எம்மை விடுவிக்க வருகிறது.

இந்த மோசமான கலாசார கெடுபிடிகளிலிருந்து துண்டித்து ஓர் ஓய்வினை பெற்றுக் கொள்ள இந்த ரமழான் துணை புரிகின்றது. இந்நிலையில், இக்காலப் பகுதியில் உங்களை நீங்கள் மீள் ஒழுங்குப்படுத்திக் கொள்ளுங்கள். புனித அல்குர்ஆனை அதிகம் அதிகம் ஓதுவதற்கும் சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

பிரார்த்திப்பதற்கும் வல்ல இறைவனோடு உரையாடவும் உங்கள் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையினதும் உங்கள் முதன்மைத் தேவைகளினதும் திசைகளில் உங்கள் சிந்தனையை திருப்புங்கள். உங்கள் இரட்சகனின் பால் உங்களுக்கு உள்ள உறவினை பலப்படுத்துங்கள்.

ஷஃபான் மாத இறுதி நாளில் அடுத்துவரும் ரமழான் மாதம் குறித்து நபி (ஸல்) அவர்கள் குத்பா பிரசங்கமொன்றை நிகழ்த்தினார்கள்.

இந்த புனித மாதத்திற்காக உள ரீதியாக எம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதற்கு முன்னதாக இந்த குத்பாவை கவனமாக நாம் வாசிக்க வேண்டும். இந்த குப்தா இவ்வாறு ஆரம்பிக்கிறது.

மக்களே! மிகச் சிறப்பானதொரு மாதம் உங்களை நோக்கி வருகிறது. இது ஓர் அருள் நிறைந்த மாதம். இம்மாதத்தில் தான் ஓர் இரவு இருக்கிறது. இது ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். இம்மாதத்தில் அல்லாஹ் பகல் பொழுதில் நோன்பு நோற்க கடமையாக்கியுள்ளான். இரவு நேரங்களில் நின்று வணங்குமாறு ஏவுகிறான்.

இம்மாத்தில் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து மேற்கொள்கின்ற சுன்னத்தான வணக்கங்களுக்கு இதர காலங்களில் பர்ழான வணக்கங்களை செய்த நன்மைகள் வழங்கப்படும். அதேநேரம், இம்மாதத்தில் நிறைவேற்றப்படுகின்ற பர்ழான வணக்கங்களுக்கு ஏனைய காலங்களில் நிறைவேற்றப்படும் 70 பர்களுக்கான நன்மைகள் வழங்கப்படும்

இது பொறுமையின் மாதமாகும். பொறுமைக்கான கூலி சுவர்க்கமாகும். இது கருணைக்கும் தர்மத்துக்குமான மாதமாகும். விசுவாசிகளின் வாழ்வாதாரங்கள் அதிகரிக்கக் கூடிய மாதமும் இதுவாகும். ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறப்பதற்காக எவர் உணவளிப்பாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

அவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவார். நோன்பாளிக்கு வழங்கப்படும் கூலியைப் போன்றே இவருக்கும் கூலிகள் வழங்கப்படும். அந்த நோன்பாளியின் பீலியிலிருந்தும் எதுவும் குறைக்கப்பட மாட்டாது…’

இவ்வாறாக இந்த நபி மொழி மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கியவாறு நீண்டு செல்கின்றது. எனினும் இதிலிருந்து இரண்டு முக்கிய கருத்துக்களை மாத்திரம் எடுத்து நோக்குவோம்.

முதலாவது ரமழான் ஸப்ருடைய மாதமாகும். ஸப்ர் என்ற பல அர்த்தங்களைக் கொண்ட கருத்துச் செறிவான சொல்லை ‘பொறுமை’ என்று மாத்திரம் மொழி மாற்றம் செய்ய முடியாது. ஸப்ர் என்கின்ற போது கஷ்டங்களின் போது அதனை சகித்துக் கொண்டு பொறுமையாக இருத்தல் என்ற கருத்தை மாத்திரம் வழங்குவதில்லை.

இச்சைகள் தூண்டப்படும் சந்தர்ப்பங்களிலும் பாவங்களை செய்யாது உறுதியாக இருப்பதையும் ஸப்ர் என்பது குறிக்கும். கடினமான சந்தர்ப்பங்களின் போதும் நன்மைகளை விடாப்பிடியாக செய்வதையும் ஸப்ர் என்ற பதம் குறிக்கும்.

எனவே, நோன்பின் போது பசியையும் தாகத்தையும் தாங்கிக் கொண்டிருப்பது என்பது ஸப்ர் எனும் பொறுமையின் ஓர் அம்சம் மாத்திரமே. அதேபோன்று, எமது கண்கள், காதுகள், உள்ளங்கள், நாவுகள், கரங்கள் போன்றனவற்றை அனைத்து வகை பாவங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வது என்பதும் பொறுமையின் அம்சங்களாகும்.

எனவே, என்னதான் உள்ளக, வெளியக முட்டுக்கட்டைகள் ஏற்பட்ட போதிலும் நன்மைகளை உறுதியுடன் தொடராக செய்ய வேண்டும். ரமழான் மாதமானது முழுமையான சகல அர்த்தங்களுடன் சேர்ந்த ஸப்ரை வேண்டி நிற்கின்றது. அதி முக்கியமான உயர் பண்புகளை வளர்த்துப் போஷிப்பதற்கான பயிற்சிக்களமொன்றையும் இந்த ரமழான் வழங்குகின்றது. நன்றி தினகரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக